கடந்த 31-ஆம் தேதி சந்தானம் நடித்த "டகால்டி', "சர்வர் சுந்தரம்' ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக விருப்பதாகத் தொடர்ந்து விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. இதனால் "டகால்டி'யின் தயாரிப்பாளர் சௌத்ரியும், "சர்வர் சுந்தரம்' தயாரிப்பாளர் செல்வகுமாரும் ஜெர்க்கானார்கள். அதனால் இருவருமே இயக்குநர் இமயம் பாரதிராஜா, தயாரிப்பாளர் கே. ராஜன், ஃபெப்சியின் முன்னாள் தலைவர் ஜி. சிவா ஆகியோர்முன்பு பஞ்சாயத்தைக் கூட்டினார்கள்.
28-ஆம் தேதி காலையிலிருந்து இரவுவரையிலும், 29-ஆம் தேதி காலை 11.00 மணிவரையிலும் பாரதிராஜாவின் வீட்டில் பஞ்சாயத்து நடந்தது. ""ரெண்டு வருஷத்துக்கு முன்னால என்னோட படத்தை ஆரம்பிச்சு, பலவகையிலும் கஷ்டப்பட்டு இப்பதான் ரிலீசுக்கு கொண்டு வந்துருக்கேன்'' என கண்ணீர் விட்டார் செல்வகுமார்.
""நான் இப்பதான் சினிமா ஃபீல்டுக்கே வந்துருக்கேன். சில நெளிவுசுழிவுகள் தெரியல. அதனால என்னோட படத்தை 31-ஆம் தேதி ரிலீஸ் பண்ண உதவுங்க'' என சௌத்ரியும் கோரிக்கை வைத்தார். கடைசி யில் செல்வகுமார் விட்டுக் கொடுத்ததனால் 31-ஆம் தேதி "டகால்டி' ரிலீசாகியது. பிப். 14-ஆம் தேதி "சர்வர் சுந்தரம்' ரிலீசாகிறது.
இந்தப் பஞ்சாயத்து சுமுகமாக முடிந்ததால், பத்திரிகையாளர்களை சந்தித்து, நடந்த நல்ல பஞ்சாயத்தை விளக்குவதற்காக 29-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பாரதிராஜா, கே. ராஜன், சுரேஷ் காமாட்சி, செல்வ குமார், சௌத்ரி, இருபடங் களின் விநியோக உரிமை வாங் கியவர்கள் ஆஜராகியிருந் தனர். கூட்டத்தில் பேசிய அனைவருமே விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதை வலியுறுத்தினார்கள். செல்வகுமார், சௌத்ரி ஆகிய இருவருக்கும் ஒரே சால்வையப் போர்த்தி மகிழ்ச்சியுறச் செய்தார் பாரதிராஜா.
கூட்டத்தில் பேசிய கே. ராஜன், ""சந்தானத்தை வைத்து "ஓடி ஓடி உழைக்கணும்' என்ற படத்தையும், பிரபு தேவாவை வைத்து "யங் மங் சங்' படத்தையும் நான்கு வருடங்களுக்குமுன்பு ஆரம்பித்தார்கள் தயாரிப் பாளர்கள் வாசன் விஷுவல் வென்சர்ஸ் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ். சிவராமன்.
அந்தப் படங்கள் பாதியி லேயே நிற்பதால் வட்டி குட்டிபோட்டு, குட்டி வட்டிபோட்டு ஏகப்பட்ட நொம்பலமாகி, இப்ப சீனிவாசன் ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) பண்ணும் நிலைமைல இருக்காரு. அவரின் நிலையை அறிந்து சந்தானம் உதவணும். இந்த சேதியை சந்தானத்தின் நண்பர்கள், அவரிடம் கொண்டு போகணும். படத்தை முடிச்சுக் கொடுத்தா மீதி சம்பளத்தை செட்டில் பண்ணிருவாரு சீனிவாசன்'' என்றார் கே. ராஜன்.
ராஜன் சொன்ன "ஓடி ஓடி உழைக்கணும்' படத்தில் சந்தானத்திற்கு ஜோடி அமைரா தஸ்தூர். படத்தின் டைரக்டர் மணிகண்டன். 2016 அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டது இந்தப் படம்.
அதேபோல் "யங் மங் சங்' படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடி லட்சுமி மேனன். படத்தின் டைரக்டர் எம்.எஸ். அர்ஜுன்.
2017 பிப்ரவரியில் ஆரம்பிக் கப்பட்டது இந்தப் படம். பிரபுதேவா, லட்சுமி மேனன் இருவருக்குமே மார்க்கெட் சுத்தமாக அவுட்டாகிவிட்டது.
பணம் போட்ட முதலாளி படுத்தபடுக் கையாக இருக்கார். வாங்கியவர்களோ படுஜாலியாக இருக்கிறார்கள்.
-பரமேஷ்